வெள்ளி, மே 7

மலரும் நினைவுகள்- 1986 ல் இருந்து 1990 வரை

 எங்க ஊர் சர்ச்சில் நண்பன் மகேசுடன் நான் 

நான் வளர்ந்தது எல்லாம் கிராமம்தான். அப்போதெல்லாம் எங்கள் ஊரில் பஞ்சாயத்து டிவி மட்டும்தான். அதுவும் கருப்பு வெள்ளை. வீட்டில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும், ஞாயிற்றுக்கிழமை திரைப்படம் மட்டும்தான் பார்க்க அனுமதி உண்டு.

பஞ்சாயத்து டிவி வந்த முதல்நாள் டிவி யில் ராமு என்ற ஜெமினி கணேசன் படம் போட்டார்கள். ஊரே திரண்டு நிற்கும். ஞாயிற்றுக்கிழமை மதியம் மாநில மொழி திரைப்படம் போடுவார்கள். எப்போதாவது மாநில மொழி திரைப்படம் தமிழ் படம் போட்டால் பஞ்சாயத்து டிவி யில் பார்க்கும்போது வெளிச்சத்தில் டிவி சரியாக தெரியாது என கொட்டகை போடுவார்கள்.

அப்பதான் எங்க ஊர்ல உள்ள ஒரு வத்தல் வியாபாரி கலர் டிவியும் டெக்கும் வாங்கினார்கள். அவங்க வீட்ல படம் பாக்கணும்னா ஒலியும் ஒளியும் பார்க்க 25 பைசா, ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்க 50 பைசா. டெக்கில் படம் பார்க்க ஒரு ரூபாய்.

சில நாள்களில் அவங்க காட்ல வத்தல் அள்ளிக் கொடுத்தா ப்ரீயா டெக்குல படம் பாக்கலாம். அதுக்காகவே வீட்டுக்கு தெரியாம அவங்க காட்ல போய் வத்தல் எல்லாம் அள்ளி சாக்குல போட்டு கட்டி கொடுப்போம். சனி,ஞாயிறு விளையாட போறோம்னு வீட்டுல போய் சொல்லிட்டு அவங்க வீட்ல போய் படம் பாப்போம்.

அப்புறம் நான் ஐந்தாவது படிக்கும்போது எங்க ஊருக்குள்ள பஸ் வர ஆரமிச்சது. முதல் தடவ வரும்போது ஊரே திரண்டு பஸ்ஸை வரவேற்றோம். ஊர்ல எல்லோருக்கும் சாக்கலேட் கொடுத்தாங்க(அதுக்குத்தான போனது).

அப்புறம் தினமும் பஸ் வரும்போது டிரைவர் யார் கண்டக்டர் யார் அப்டின்னு ஓடி போய் செக் பண்ணுவோம். ஒவ்வொரு டிரைவருக்கும் ஒரு பட்டப் பேர் வைத்தோம். நோஞ்சான், ஓமகுச்சி, ராம்கி(அப்ப நடிகர் ராம்ஜி கொஞ்சம் பேமஸ்.) நிறைய பேர் மறந்துட்டது. இன்னிக்கு இந்த டிரைவர்தான் வருவார் அப்படின்னு பெட் கூட கட்டுவோம்.
எங்க ஊர் பஸ். நண்பன் தனவேலுடன் நான்.
அப்புறம் காலாண்டு தேர்வு,அரையாண்டு,முழு ஆண்டு தேர்வு விடுமுறைகளில் பஸ் ஸ்டாப் போய் யாராவது உறவினர்கள் வீட்டுக்கு வாராங்களா அப்டின்னு தேடுவோம். யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா ஒரே சந்தோசம்தான். எல்லா நண்பர்கள்கிட்டையும் எங்க வீட்டுக்கு எங்க மாமா வந்திருக்காங்க, எங்க சித்தி வந்திருக்காங்கன்னு பெருமையா சொல்லுவோம். நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா கொஞ்சம் பெருமையா இருக்கும்.

பௌர்ணமி அன்னிக்கு எல்லா நண்பர்களும் வீட்ல இருந்து சோறு கட்டிக்கிட்டு ஒரு மரத்தடியில போய் நிலா சோறு சாப்பிடுவோம். ஞாயிற்றுக்கிழமை படம் பாக்கும்போதோ, ஒலியும் ஒளியும் பாக்கும்போதோ கரண்ட் போயிடுச்சுன்னா எல்லா கடவுள்களையும் கூப்பிடுவோம். EB காரனை கண்டபடி திட்டுவோம்.

அரிக்கன் விளக்கு தான் அப்ப வீட்டுல இருக்கும். கரண்ட் இல்லைன்னா அரிக்கன் விளக்கு எரியும். அது மேல பேப்பர் வச்சு எரிய வைத்து விளையாடுவோம். அரிக்கன் விளக்கு வெளிச்சம் மிக அழகாக இருக்கும். இரண்டு கையையும் வைத்து சுவரில் ஆடு,மாடு, வண்ணத்திபூச்சி நிழல் விழ வைப்போம்.

சிலநாள் அம்மா வெளியூர்போகும்போது புது படத்திற்கு கூப்பிட்டு போவாங்க. திரும்பி ஊருக்கு வந்ததும் அந்த தியேட்டர் பத்தியும், அந்த படத்தை பத்தியும் பேசுனா, பசங்க எல்லோரும் கதை கேப்பாங்க. அந்த கதை கேக்குறதுக்கு நம்மளை சுத்தி ஒரு கூட்டமே இருக்கும்.

பொங்கலுக்கு நெருங்கின நண்பர்கள், உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புவோம். நமக்கும் வரும். ஆனால் சில நெருங்கிய உறவினர்கள், நண்பகல் கிட்ட இருந்து வாழ்த்து வரலைனா ரொம்ப கஷ்டமா இறக்கும். அவங்களுக்கு லெட்டர் போட்டு திட்டுவோம். பொங்கல் டைம்னா வாழ்த்து அட்டல ரஜினி,சிவாஜி,நதியா, ராதா, கரும்பு,மாட்டுவண்டி படம் போட்ட அட்டைகள் கிடைக்கும்.(இப்ப கிடைக்குதா?)

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வெடி வாங்கி கொடுத்துடுவாங்க. ஆனாலும் தீபாவளி வரைக்கும் வேணும்னு கொஞ்சம் கொஞ்சமாக வெடிப்போம். தீபாவளிக்கு அம்மா வச்சிருந்த அதுரச மாவை திருடி திம்போம். தீபாவளி முடிஞ்சதும் கார்த்திகைக்கு வெடி சேர்த்து வைப்போம்.

பசங்களோட காட்டுக்கு போய் இலந்தபழம் பொறுக்கிட்டு வருவோம். ஒருதடவ காட்டுக்குள்ள போனா ஒரு மஞ்சப்பை நிறையா பழம் கிடைக்கும். புளியமரத்துல ஏறி புளியம் பழம்(உதப்பழம்ன்னு சொல்லுவாங்க. பழுத்தும் பழுக்காமலும் இருக்கும்) பறிச்சு  திம்போம்.
எங்க ஊர் காடு.
மழை நேரத்துல ஓடை நிறைய தண்ணி போகும். அப்ப வீட்ல எல்லாம் குளியல் இல்லை(இப்ப மட்டும் என்னவாம்). ஓடைலதான் குளிக்க போறது. வீட்டுலையும் தண்ணி கஷ்டம்தான். கம்மாயில்(குளம்) போய் தண்ணி எடுக்கணும்.

ஒவ்வொருத்தருக்கும் சொந்தமா ஒரு ஊத்து இருக்கும். வேற யாரும் தண்ணி எடுக்க கூடாதுன்னு ஊத்தை சுத்தி வேலி போட்டிருப்போம். சில நேரம் தெரிஞ்சவுங்க தண்ணி கேப்பாங்க. நமக்கே இங்க இருக்காது.இரவு நேரத்துல வேலியை பிச்சிபோட்டுட்டு தண்ணி திருடுற வேலை எல்லாம் கூட நடக்கும்.
 எங்க ஊர் கம்மாய்..

ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம். இபெல்லாம் ஒரு எஸ் எம் எஸ் ல எல்லாமே முடிஞ்சுடுது. இனி இந்த பொற்காலம் கிடைக்குமா?(பொற்காலம் டீவீடீ வேணும்னா கிடைக்கும்). அப்புறம் ராணி காமிக்ஸ், பூந்தளிர், கோகுலம், சிறுவர் மலர் அப்டின்னு நிறைய கதை புத்தகங்கள் கிடைக்கும். ராணி காமிக்ஸ்ல வர்ற மாயாவி மாதிரி முகத்துல துணிய கட்டிட்டு சண்டை போட்டதெல்லாம் க்கும்...ஒரு காலம்.

இப்படி உங்க மலரும் நினைவுகளை இங்க ஷேர் பண்ணிக்கலாமே....

லொள்ளு:

110 வயது கிழவியை பேட்டி எடுக்க ஒரு நிருபர் போயிருந்தார். விடை பெறும்போது அடுத்த வருடம் உங்க 111 வது பிறந்தநாளுக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்க, முடிந்தால் வருகிறேன் என்றான்.

உடனே பாட்டி "முடிந்தால்னு ஏம்பா சொல்ற? கண்டிப்பா உன்னால் முடியும்.நீயும் என்னை மாதிரி ஆரோக்கியமாதான இருக்கிற" என்று சொன்னார்..

25 கருத்துகள்:

மதார் சொன்னது…

Rani comics mayavi maraka mudiuma? Vazhu attai ... Nanum oru kattu mathiri +2 varai vachurunthen . Tv kathai palasa kilariteenga. Villathikulam bus? Tuticorin dist?

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்லா இருக்கு நண்பா. கீப் ராக்கிங்.

ஸ்ரீ.... சொன்னது…

நினைவுகள் நீளமாகவும், நேர்த்தியாகவும், நிறைய நினைவுகளைக் கிளறும் வகையிலும் இருந்தது.

ஸ்ரீ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ மதார் நன்றி. ஆமாம் விளாத்திகுளம் தூத்துக்குடி மாவட்டம்தான்.

@ ராம்ஸ் நான், தனவேல் மகேஷ் எப்டி இருக்கோம் பாத்தியா?

@ நன்றி ஸ்ரீ,உங்க நினைவுகளையும் பதிவு செய்யலாமே?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

இப்ப வீட்லயே கலர் டி.வி.டி.வி.டி ஹோம் தியேட்டர் கம்பியுட்டர் எல்லா வசதிகள் இருந்தாலும்
அப்ப வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஞாயிற்று கிழமை படத்திற்கும் யார் யார் வீட்டு ஜன்னலுக்கு வெளியே
தவம் கிடந்தது ஒரு பொற்காலம்..
ரமேஷ் உங்களுக்கு 86 டு 90
எனக்கு 76 டு 80
நினைவுகளை மலர வைத்தமைக்கு
மிக்க நன்றி ரமேஷ்....

Chitra சொன்னது…

உடனே பாட்டி "முடிந்தால்னு ஏம்பா சொல்ற? கண்டிப்பா உன்னால் முடியும்.நீயும் என்னை மாதிரி ஆரோக்கியமாதான இருக்கிற" என்று சொன்னார்

......இந்த positive attitude ஒன்று போதுமே....... அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள.....
உற்சாகமான நினைவுகள். .....

தனவேல் சொன்னது…

ரமேஷ், மறக்கமுடியுமா அந்த நினைவுகளை.
போட்டோவுடன் பார்த்ததில் மனதில் ஒரு வித ஏக்கம்
அந்த நினைவுகள் திரும்பக் கிடைக்குமா என்று.
நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ மணி
வயலும் வாழ்வும், எதிரொலி, சாந்தி, விழுதுகள் எல்லாம் நியாபகம் இருக்குதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@சித்ரா
என்னால் சுறா படம் பாக்கமுடியும் -நம்பிக்கை
என்னால் மட்டும்தான் சுறா படம் பாக்கமுடியும் -தன்நம்பிக்கை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஆமாம் தனவேல்

விந்தைமனிதன் சொன்னது…

நிறைய கொசுவர்த்தி கிளப்பிட்டீங்க...

நானே ரொம்ப நாளுக்கப்புறம் காலைல 6 மணிக்கு எந்திரிச்சிருக்கேன். இன்னிக்குனு பார்த்து எனக்குள்ள இருந்த 86-90 ய தூண்டிவிட்டுட்டீங்க. (நான் இப்போ 30 ல எண்டர்.. நீங்க?)

ம்ம்ம்.உங்களுக்கு புளியம்பழம் எனக்கு நாவல்பழம்...

அப்புறம் ராணி காமிக்ஸ்.... நான் 67-8 வயசுலயே ராஜேஷ்குமார், மாலைமதி(இப்பவும் வருதா?!)க்கு போயிட்டேன்....அப்புறம் தேவிபாலா,சுபா,சாண்டில்யன்,சுஜாதன்னு 13க்குள்ள ஹைஜம்ப்தான்...

வீட்டுல டி.வி இருந்தா அப்போல்லாம் ஊருலயே ரொம்ப பணக்காரங்க

அந்த பருவத்துல இருந்தவை ஏராளம்...
இப்போ இழந்தவை ஏராளம்...

ம்ம்ம்ம்...
ignorance is bliss னு யாரோ சொன்னாங்க...

அது அர்த்தமுள்ளது...

“டி.வி ல இருக்குற மாதிரி வாழ்க்கைலயும் ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்??!!” (முதல்வன்:சுஜாதா)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எனக்குள் ஒரு கிராமத்தான் அப்படியே இருக்கான்...
உங்களுக்குள்ளும் .....
தொடருங்கள் ரமேஷ்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ செந்தில்
க்கும் அதெல்லாம் இப்ப திரும்பி வருமா?

@விந்தைமனிதன்

மாலைமதி எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப வருதான்னு தெரியலை. அப்புறம் ராணி முத்து. அதுல கேள்வி பதில் செம காமடியா இருக்கும்.

ஒரு குதிரை கொலை செய்கிறது,
திக் திக் திலகா
இதெல்லாம் மாலைமதியில் வந்த கதைகள்.

அப்புறம் குமுதம் வாரம் ஒரு நடிகர் தொகுத்து வழங்குவார்கள்..

KVR சொன்னது…

நானும் கிராமத்தான் தான். ஆனால் உங்க அளவுக்கு எனக்கு இந்த அனுபவங்கள் வாய்க்கவில்லை. தொலைக்காட்சிப்பெட்டி அனுபவம் மட்டும் கொஞ்சம். வாழ்த்து அட்டை அனுபவம் அப்படியே ரெண்டு பேருக்கும் ஒண்ணு தான்.

கொசுவத்தி ரொம்ப நல்லா இருக்கு. டெண்ட் கொட்டகையில் தரை டிக்கெட் எடுத்து மணல் முகடு கட்டி படம் பார்த்த அனுபவம் இருக்கணுமே? அதையும் எழுதுங்க

அனு சொன்னது…

எனக்கும் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுடுச்சே..

//எல்லா நண்பர்கள்கிட்டையும் எங்க வீட்டுக்கு எங்க மாமா வந்திருக்காங்க, எங்க சித்தி வந்திருக்காங்கன்னு பெருமையா சொல்லுவோம்//
நாங்கல்லாம் தான் அந்த மாமா பொண்ணு, சித்தி பொண்ணு கேரக்டர்.. பத்து பதினோரு மாசம் வீட்டுக்குள்ளயே அடச்சு வச்சுட்டு summer vacation-ல தான் ஊருக்கு கூட்டிட்டு போவாங்க.. அந்த கொஞ்ச நாளுக்குள்ள எவ்வளவு லூட்டி அடிக்க முடியுமோ அவ்வளவு அடிப்போம்..

எலந்த பழம், உதப்பழம், மாம்பழம் எல்லாம் மரமேறி அடிச்ச அனுபவங்களை எல்லாம் மறக்க முடியாது..அப்புறம், அண்ணன்களை எல்லாம் கூட்டிட்டு போய் திருட்டு நுங்கு சாப்பிடுற சுகம் இருக்கே.. அப்பப்பா.. அது சுகம்..

ஊர் திருவிழா, என்னை பயமுறுத்திய சாமியாட்டம், பேய் மரம், தாயம், நொண்டி, தோட்டம்,பம்ப்செட் குளியல், கூழ், கஞ்சி, மொட்டை மாடி தூக்கம், திண்ணை தாத்தா பாட்டீஸ்.. எல்லாமே மறக்க முடியாதவை..

ஆனா, என்ன தான் கயிறு கட்டி சொல்லி குடுத்தாலும் இப்போ வரைக்கும் குருவி நீச்சல் தான் தெரியும். ஆனாலும், நண்டு சிண்டுகள் முன்னாடியெல்லாம் மானத்த காப்பத்தனுமேன்னு நானும் ரவுடிதான் ரேஞ்சுக்கு "எனக்கும் நீச்சல் தெரியும்-னு சொல்லிட்டு இருந்தேன்.. ரெண்டு மாசம் முன்னாடி என்னை நீச்சல் அடிக்க சொல்லி அதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்க..

இன்னும் நிறைய இருக்கு..ஆனா, அதையெல்லாம் எழுதினா, போஸ்ட்-அ விட் பின்னூட்டம் பெருசா போய்டும்.. அதனால நிறுத்திக்கறேன்..

//“டி.வி ல இருக்குற மாதிரி வாழ்க்கைலயும் ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்??!!”// ரிப்பீட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@KVR
எனக்கு டென்ட் கொட்டகைல படம் பார்த்த அனுபவம் இல்ல. ஆனா கேள்விபட்டிருக்கேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அனு

//நாங்கல்லாம் தான் அந்த மாமா பொண்ணு, சித்தி பொண்ணு கேரக்டர்.. பத்து பதினோரு மாசம் வீட்டுக்குள்ளயே அடச்சு வச்சுட்டு summer vacation-ல தான் ஊருக்கு கூட்டிட்டு போவாங்க.. அந்த கொஞ்ச நாளுக்குள்ள எவ்வளவு லூட்டி அடிக்க முடியுமோ அவ்வளவு அடிப்போம்..//

உண்மைதாங்க ஆண் சொந்தக்காரங்களை விட பெண் சொந்தக்காரங்க (சித்தி பொண்ணு,மாமா பொண்ணு ) வந்தா கொஞ்சம் பந்தாவுக்காக மரத்துல ஏறி பழம் பறிச்சு கொடுக்குறது, பூனை,கிளி,நாய்க்குட்டி வாங்கி கொடுக்குறது. இப்பெல்லாம் இதெல்லாம் நம்ம சொந்தக்காரங்கன்னு எங்கயாவது function ல பாக்குரதொட சரி.

//ஊர் திருவிழா, என்னை பயமுறுத்திய சாமியாட்டம், பேய் மரம், தாயம், நொண்டி, தோட்டம்,பம்ப்செட் குளியல், கூழ், கஞ்சி, மொட்டை மாடி தூக்கம், திண்ணை தாத்தா பாட்டீஸ்.. எல்லாமே மறக்க முடியாதவை..//

கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பிறகு விளக்கு பூஜைக்கு வர்ற பொண்ணுங்களை பாக்குரதுக்காகவே கோவிலுக்கு போவோம்.

//ஆனா, என்ன தான் கயிறு கட்டி சொல்லி குடுத்தாலும் இப்போ வரைக்கும் குருவி நீச்சல் தான் தெரியும்.//

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை குளிக்கிறது...hi hi

பிரபாகர் சொன்னது…

அருமையா இருக்கு ரமேஷ்! தாமதமாய்த்தான் படிக்கிறேன்! சாரி...

பிரபாகர்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

No problem prabhakar

பெயரில்லா சொன்னது…

very good. its seen to be like my early live at my village:)
G.Jeyakumar

Senthil's Passion 4 Cinema சொன்னது…

ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க ரமேஷ்.... ஒரு கிராமத்து வாழ்கையை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துடீங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thanks senthil

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ்

கொசுவத்தி - நல்லாவே சுத்தி இருக்கீங்க - அசை போட்டு ஆனந்தித்து - படிப்பவர்களையும் மகிழ்வித்து ..... நல்ல இடுகை

நல்வாழ்த்துகள் ரமேஷ்
நட்புடன் சீனா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரொம்ப நன்றி சீனா சார்

தாராபுரத்தான் சொன்னது…

நீங்காத நினைவுகள்ங்க தம்பீ.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது