எங்க ஊர் சர்ச்சில் நண்பன் மகேசுடன் நான்
பஞ்சாயத்து டிவி வந்த முதல்நாள் டிவி யில் ராமு என்ற ஜெமினி கணேசன் படம் போட்டார்கள். ஊரே திரண்டு நிற்கும். ஞாயிற்றுக்கிழமை மதியம் மாநில மொழி திரைப்படம் போடுவார்கள். எப்போதாவது மாநில மொழி திரைப்படம் தமிழ் படம் போட்டால் பஞ்சாயத்து டிவி யில் பார்க்கும்போது வெளிச்சத்தில் டிவி சரியாக தெரியாது என கொட்டகை போடுவார்கள்.
அப்பதான் எங்க ஊர்ல உள்ள ஒரு வத்தல் வியாபாரி கலர் டிவியும் டெக்கும் வாங்கினார்கள். அவங்க வீட்ல படம் பாக்கணும்னா ஒலியும் ஒளியும் பார்க்க 25 பைசா, ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்க 50 பைசா. டெக்கில் படம் பார்க்க ஒரு ரூபாய்.
சில நாள்களில் அவங்க காட்ல வத்தல் அள்ளிக் கொடுத்தா ப்ரீயா டெக்குல படம் பாக்கலாம். அதுக்காகவே வீட்டுக்கு தெரியாம அவங்க காட்ல போய் வத்தல் எல்லாம் அள்ளி சாக்குல போட்டு கட்டி கொடுப்போம். சனி,ஞாயிறு விளையாட போறோம்னு வீட்டுல போய் சொல்லிட்டு அவங்க வீட்ல போய் படம் பாப்போம்.
அப்புறம் நான் ஐந்தாவது படிக்கும்போது எங்க ஊருக்குள்ள பஸ் வர ஆரமிச்சது. முதல் தடவ வரும்போது ஊரே திரண்டு பஸ்ஸை வரவேற்றோம். ஊர்ல எல்லோருக்கும் சாக்கலேட் கொடுத்தாங்க(அதுக்குத்தான போனது).
அப்புறம் தினமும் பஸ் வரும்போது டிரைவர் யார் கண்டக்டர் யார் அப்டின்னு ஓடி போய் செக் பண்ணுவோம். ஒவ்வொரு டிரைவருக்கும் ஒரு பட்டப் பேர் வைத்தோம். நோஞ்சான், ஓமகுச்சி, ராம்கி(அப்ப நடிகர் ராம்ஜி கொஞ்சம் பேமஸ்.) நிறைய பேர் மறந்துட்டது. இன்னிக்கு இந்த டிரைவர்தான் வருவார் அப்படின்னு பெட் கூட கட்டுவோம்.
எங்க ஊர் பஸ். நண்பன் தனவேலுடன் நான்.
அப்புறம் காலாண்டு தேர்வு,அரையாண்டு,முழு ஆண்டு தேர்வு விடுமுறைகளில் பஸ் ஸ்டாப் போய் யாராவது உறவினர்கள் வீட்டுக்கு வாராங்களா அப்டின்னு தேடுவோம். யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா ஒரே சந்தோசம்தான். எல்லா நண்பர்கள்கிட்டையும் எங்க வீட்டுக்கு எங்க மாமா வந்திருக்காங்க, எங்க சித்தி வந்திருக்காங்கன்னு பெருமையா சொல்லுவோம். நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா கொஞ்சம் பெருமையா இருக்கும்.பௌர்ணமி அன்னிக்கு எல்லா நண்பர்களும் வீட்ல இருந்து சோறு கட்டிக்கிட்டு ஒரு மரத்தடியில போய் நிலா சோறு சாப்பிடுவோம். ஞாயிற்றுக்கிழமை படம் பாக்கும்போதோ, ஒலியும் ஒளியும் பாக்கும்போதோ கரண்ட் போயிடுச்சுன்னா எல்லா கடவுள்களையும் கூப்பிடுவோம். EB காரனை கண்டபடி திட்டுவோம்.
அரிக்கன் விளக்கு தான் அப்ப வீட்டுல இருக்கும். கரண்ட் இல்லைன்னா அரிக்கன் விளக்கு எரியும். அது மேல பேப்பர் வச்சு எரிய வைத்து விளையாடுவோம். அரிக்கன் விளக்கு வெளிச்சம் மிக அழகாக இருக்கும். இரண்டு கையையும் வைத்து சுவரில் ஆடு,மாடு, வண்ணத்திபூச்சி நிழல் விழ வைப்போம்.
சிலநாள் அம்மா வெளியூர்போகும்போது புது படத்திற்கு கூப்பிட்டு போவாங்க. திரும்பி ஊருக்கு வந்ததும் அந்த தியேட்டர் பத்தியும், அந்த படத்தை பத்தியும் பேசுனா, பசங்க எல்லோரும் கதை கேப்பாங்க. அந்த கதை கேக்குறதுக்கு நம்மளை சுத்தி ஒரு கூட்டமே இருக்கும்.
பொங்கலுக்கு நெருங்கின நண்பர்கள், உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புவோம். நமக்கும் வரும். ஆனால் சில நெருங்கிய உறவினர்கள், நண்பகல் கிட்ட இருந்து வாழ்த்து வரலைனா ரொம்ப கஷ்டமா இறக்கும். அவங்களுக்கு லெட்டர் போட்டு திட்டுவோம். பொங்கல் டைம்னா வாழ்த்து அட்டல ரஜினி,சிவாஜி,நதியா, ராதா, கரும்பு,மாட்டுவண்டி படம் போட்ட அட்டைகள் கிடைக்கும்.(இப்ப கிடைக்குதா?)
தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வெடி வாங்கி கொடுத்துடுவாங்க. ஆனாலும் தீபாவளி வரைக்கும் வேணும்னு கொஞ்சம் கொஞ்சமாக வெடிப்போம். தீபாவளிக்கு அம்மா வச்சிருந்த அதுரச மாவை திருடி திம்போம். தீபாவளி முடிஞ்சதும் கார்த்திகைக்கு வெடி சேர்த்து வைப்போம்.
பசங்களோட காட்டுக்கு போய் இலந்தபழம் பொறுக்கிட்டு வருவோம். ஒருதடவ காட்டுக்குள்ள போனா ஒரு மஞ்சப்பை நிறையா பழம் கிடைக்கும். புளியமரத்துல ஏறி புளியம் பழம்(உதப்பழம்ன்னு சொல்லுவாங்க. பழுத்தும் பழுக்காமலும் இருக்கும்) பறிச்சு திம்போம்.
எங்க ஊர் காடு.
மழை நேரத்துல ஓடை நிறைய தண்ணி போகும். அப்ப வீட்ல எல்லாம் குளியல் இல்லை(இப்ப மட்டும் என்னவாம்). ஓடைலதான் குளிக்க போறது. வீட்டுலையும் தண்ணி கஷ்டம்தான். கம்மாயில்(குளம்) போய் தண்ணி எடுக்கணும்.ஒவ்வொருத்தருக்கும் சொந்தமா ஒரு ஊத்து இருக்கும். வேற யாரும் தண்ணி எடுக்க கூடாதுன்னு ஊத்தை சுத்தி வேலி போட்டிருப்போம். சில நேரம் தெரிஞ்சவுங்க தண்ணி கேப்பாங்க. நமக்கே இங்க இருக்காது.இரவு நேரத்துல வேலியை பிச்சிபோட்டுட்டு தண்ணி திருடுற வேலை எல்லாம் கூட நடக்கும்.
எங்க ஊர் கம்மாய்..
ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம். இபெல்லாம் ஒரு எஸ் எம் எஸ் ல எல்லாமே முடிஞ்சுடுது. இனி இந்த பொற்காலம் கிடைக்குமா?(பொற்காலம் டீவீடீ வேணும்னா கிடைக்கும்). அப்புறம் ராணி காமிக்ஸ், பூந்தளிர், கோகுலம், சிறுவர் மலர் அப்டின்னு நிறைய கதை புத்தகங்கள் கிடைக்கும். ராணி காமிக்ஸ்ல வர்ற மாயாவி மாதிரி முகத்துல துணிய கட்டிட்டு சண்டை போட்டதெல்லாம் க்கும்...ஒரு காலம்.
இப்படி உங்க மலரும் நினைவுகளை இங்க ஷேர் பண்ணிக்கலாமே....
லொள்ளு:
110 வயது கிழவியை பேட்டி எடுக்க ஒரு நிருபர் போயிருந்தார். விடை பெறும்போது அடுத்த வருடம் உங்க 111 வது பிறந்தநாளுக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்க, முடிந்தால் வருகிறேன் என்றான்.
உடனே பாட்டி "முடிந்தால்னு ஏம்பா சொல்ற? கண்டிப்பா உன்னால் முடியும்.நீயும் என்னை மாதிரி ஆரோக்கியமாதான இருக்கிற" என்று சொன்னார்..